தமிழகத்தில் பூரண மதுவிலக்கு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பல காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு நடத்தும் மதுபான கடைகள் மூலமாக நல்ல வருமானம் வருவதால் மதுபான கடைகளை மூடுவது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக விற்பனை செய்யும் நேரத்தை குறைத்ததுடன், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் மத வழிபாட்டு தளங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளை நடத்தக்கூடாது என அறிவித்துள்ளது.
அதோடு தற்போது இருக்கும் கடைகளுக்கு இடமாறுதல் தொடர்பான அனுமதி மட்டுமே கொடுக்கப்படுவதுடன், புதிதாக கடைகளை அமைப்பதற்கு எந்த ஒரு அனுமதியும் கொடுக்கப் படுவதில்லை. இந்நிலையில் சுற்றுலா தளங்கள் மற்றும் நீர் நிலைகளின் அருகில் சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி செல்வதால், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மது பாட்டில்களை லேபிள்களுடன் வழங்கினால் 10 ரூபாய் கொடுக்கப்படும் என அறிவித்தது. இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாகவும் தற்போது நீதிமன்றத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் 11-ம் தேதி மதுபான கடைகளில் உள்ள காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பான உத்தரவு வெளியிடப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.