தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு விதமான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறையிலும் பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தமிழகத்தில் டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இவர் ஒரு நேர்மையான மற்றும் திறமையான அதிகாரி. இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றுகின்றனர். இவர் காவல் துறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் மக்களின் குறைகள் போன்றவற்றை கேட்டறிந்து அதை சரி செய்து வருகிறார்.
இந்நிலையில் காவல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக மாநிலம் முழுதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று தஞ்சாவூரில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு காவல் நிலையத்தை தவிர அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றார். அதன் பிறகு தற்போது குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அதிகரித்து வருவதால் மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு தற்கொலை போன்ற எண்ணங்கள் இருந்தால் உடனடியாக மகளிர் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றார்.