கவுகாத்தியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பி.டிஇஎஸ் இறுதி ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதாவது உயிரிழந்த மாணவர் கேரளாவைச் சேர்ந்த சூர்யநாராயண் பிரேம் கிஷோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்றுகாலை விடுதி அறையில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை எனவும் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐஐடி கவுகாத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 செப்டம்பர் 16ம் தேதி, ஐஐடி கவுகாத்தி வளாகத்தில் வடிவமைப்புத்துறையின் இளங்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. மாணவரின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கவுகாத்திக்கு வந்துகொண்டிருக்கின்றனர். மாணவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நிறுவனம் தன் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறது” என்று கூறியுள்ளது.