பிரித்தானிய மன்னரின் பேனா மை விபத்திற்கு பிறகு, அவரது நலன் விரும்பிய ஒருவர், மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கு பேனா ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
பிரித்தானியாவின் மகாராணி 2- ம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக பதவியேற்றுள்ளார். அதன் அடிப்படையில் நாட்டின் நான்கு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், மன்னர் மூன்றாம் சார்லஸ் செவ்வாயன்று வடக்கு அயர்லாந்தில் கையெழுத்திடும் விழாவின் போது மை கசிந்த பேனாவால் விரக்தியடைந்தார். இதைப் போலவே பெல்ஃபாஸ்டுக்கு அருகிலுள்ள ஹில்ஸ்பரோ கோட்டையில் கேமராக்களுக்கு முன்னால் பார்வையாளர்களின் புத்தகத்தில் கையெழுத்திடும் போதும் அவர் பயன்படுத்திய பேனாவின் மை கசிந்து மன்னர் மூன்றாம் சார்லஸை வெறுப்படைய செய்தார்.
அப்போது மன்னர் மூன்றாம் சார்லஸ், “ஓ கடவுளே நான் இந்த பேனாவை வெறுக்கின்றேன் என்று தெரிவித்ததுடன் எழுந்து நின்று பேனாவை தன் மனைவி மற்றும் மகாராணி துணைவியார் கமீலாவிடம் கொடுத்தார். அத்துடன் சார்லஸ் தன் விரல்களைத் துடைத்தபடி, ஓ இதை பார், இது எல்லா இடங்களிலும் போகின்றது” என்று கமீலாவிடம் தெரிவித்தார். மேலும் இந்த பேனா மை கசிவு விஷயத்தை என்னால் தாங்க முடியாது, என்று சார்லஸ் மன்னர் விரக்தியடைந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி மிகப்பெரிய பேசு பொருளானது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவின் கார்டிஃப் நகருக்கு விஜயம் செய்த மன்னர் மூன்றாம் சார்லஸ், அங்கு திரண்டு இருந்த பொதுமக்களிடம் கை குலுக்கி சிறிய உரையாடல் நடத்தி வந்தார்.
அப்போது மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு அவரது நலன் விரும்பி ஒருவர் திடீரென பேனா ஒன்றை பரிசாக அளித்தார். ஆரம்பத்தில் குழப்பமடைந்த மன்னர் மூன்றாம் சார்லஸ், விரைவில் அதை உணர்ந்து கொண்டு வெடித்து சிரித்தார். அத்துடன் ரசிகரின் அன்புப் பரிசை ஏற்றுக்கொண்டு பேனாவை மன்னர் மூன்றாம் சார்லஸ் பார்த்தவுடன், அங்கிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கசிந்த பேனாவுடன் விபத்து படம்பிடிக்கப்பட்ட பிறகு, மன்னர் மூன்றாம் சார்லஸின் நலன் விரும்பி அவருக்கு பேனாவைப் பரிசளித்தது தொடர்பான வீடியோவை டுவிட்டரில் ராயல் சப்போர்ட்டர் என்ற பயனர் வெளியிட்டுள்ளார்.