முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வு குறித்து அந்நாட்டின் தேர்வுக் குழு மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அடுத்த மாதம் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாபர் அசாம் அணிக்கு தலைமை தாங்குவார் என்றும், அவருக்கு துணை தலைவராக ஷதாப் கான் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. முழங்கால் காயத்தில் இருந்து மீண்ட ஷாஹீன் அப்ரிடி மீண்டும் அணியில் இணைந்தார். இந்த அணியில் சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பையில் இடம்பெற்ற வீரர்களே பெரும்பாலானோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல சமீபகாலமாக சிறந்த ஃபார்மில் இருக்கும் ஷான் மசூத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பக்கர் ஜமான் கழட்டி விடப்பட்டு காத்திருப்பு வீரராக இருக்கிறார்.. பாகிஸ்தான் அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை தேர்வாளர் முகமது வாசிம் மற்றும் தற்போதைய தலைமை பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக் மீது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர், அணி தேர்வால் கோபமடைந்துள்ளார். பாபர் அசாமுடன் தொடக்க ஆட்டக்காரராக ஃபகர் ஜமானை முதன்மை அணியில் சேர்க்காததற்காக, அவரை ரிசர்வ் வீரராக தேர்வு செய்ததற்காக அக்தர் தேர்வாளர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அக்தர் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது, “பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கடினமான காலம் வரப்போகிறது. பாகிஸ்தான் இதை விட சிறந்த தேர்வை செய்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முதல் சுற்றிலேயே வெளியேறிவிடக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன். இந்த மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை.. அதேபோல டெத் பேட்டிங்கும் அப்படித்தான்,”பாகிஸ்தான் இந்த அணியுடன் முன்னேறினால், நான் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
அக்டோபர் 23-ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பையில் மோதுகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:
பாபர் ஆசம் (கே), ஷதாப் கான் (து.கே), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யுஸ்மான் காதர்
காத்திருப்பு வீரர்கள் : ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி