கேரளாவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. தெருவில் சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் சிறியவர் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இந்த வருடம் இதுவரையிலும் நாய்கள் கடித்து 21 பேர் பலியான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாலைகளில் அங்குமிங்கும் ஓடும் தெருநாய்களால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக இருசக்கர வாகன ஒட்டிகள் தெருநாய்களால் விபத்தில் சிக்கி வருகின்றனர். நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சில பகுதிகளில் நாய்களை கொடூரமாக கொன்று தூக்கிலிடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.இதனிடையில் நாய்களை கொல்வதும், அவைகளை துன்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம் என மாநில போலீஸ் டி.ஜி.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காசர் நீதிமன்றத்தில் பள்ளிக்கு போகும் மாணவிகளுக்கு, ஒரு சிறுமியின் தந்தை சமீர் (50) என்பவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை (ஏர்கன்) ஏந்தி பாதுகாப்புக்கு சென்றார். அது சமூகவலைதளத்தில் வைரலாகியது. அதனைத் தொடர்ந்து சமீரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பீதியை ஏற்படுத்தும் வகையிலான காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பரப்பியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.