தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30-வது மாநில மாநாடு நாகையில் இன்று முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி பொதுக்குழு கூட்டங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் மட்டுமே பேசுகிறார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் பேசுவதில்லை.
பாஜக கட்சியினர் பிரதமர் மோடியை இரும்பு மனிதன் என்று விளம்பரம் செய்கின்றனர். அந்த இரும்பு மனிதரையே டெல்லியில் விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தி ஆட்டிப் பார்த்தனர். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் யாராலும் தோற்கடிக்க முடியாத பிரதமரை 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்துள்ளனர் விவசாயிகள். இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி மொழியாக இருக்க வேண்டும் என அமித்ஷா கூறுகிறார். இது பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் நிறைந்த இந்திய நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும். வருகிற 2024-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத சக்திகளை தோற்கடிக்க வேண்டும்.
அதற்கு மத சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் எத்தனை ஜாதியினரை அழைத்து கூட்டம் போட்டாலும் தமிழ்நாட்டில் ஒருபோதும் காவி கொடியை நாட்ட முடியாது. அதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். தமிழகத்தில் உள்ள கோவில் நலங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையகப்படுத்த துடிக்கிறார். தமிழ்நாட்டில் நாங்கள் சிபிஎம் கூட்டணியில் இருந்தாலும், மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தினால் அதை நிறுத்துவதற்கும், திருத்துவதற்கும் ஒருபோதும் தயங்க மாட்டோம் என்றார்.