மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது பத்ரி பிரசாத் பாண்டா என்ற 7 வயது சிறுவன் மத்திய அமைச்சரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் எங்கள் ஊரில் முன்னதாக ரயில் பாதையை கடப்பதற்கு ரயில்வே லெவல் கிராசிங் இருந்தது. தற்போது எங்கள் கிராமத்தில் கீழ் பாலம் அமைக்கப்பட்டதால் லெவல் கிராசிங் மூடப்பட்டது. அந்த கீழ் பாலம் எங்கள் கிராமத்தில் இருந்து 1/2 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது.
இதன் காரணமாக கிராம மக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே எங்கள் கிராமத்தை ஒட்டி ரயில்வே நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சிறுவனின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் சிறுவனின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பாலம் அமைக்க உத்தரவிட்ட அமைச்சருக்கு கிராம மக்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.