தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ப்ளூ காச்சல் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் தற்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது எச்1 என்1 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள காய்ச்சலில் இருந்து நாம் விடுபட கட்டாய முகவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இதற்கு அரசு உடனடியாக வழிகாட்டு வழிமுறைகளை வெளியிட்டு உரிய விளம்பரங்கள் மூலம் மக்களின் அச்சத்தை போக்கி பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் காய்ச்சல் குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதால் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலங்கள் வரை விடுமுறை அளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து அவர்களுக்கு கற்றல் தடைபடாமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். 10, 11, 12 ஆகிய வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இருப்பதால், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலின்படி பாதுகாப்புடன் வகுப்புகள் நடத்த முன் வரவேண்டும். மேலும் காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக உரிய மருத்துவ உதவிகளை செய்து அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.