தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் மின்கட்டணம் போன்றவைகள் விலை அதிகரித்துள்ளது. அதோடு கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் பலரும் திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து எந்த ஒரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், விலை உயர்வு குறித்த அறிவிப்பை மட்டுமே வெளியிடுகிறது. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என கூறி, இப்போதும் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. உதயநிதியின் ராசியோ என்னவோ அவர் எப்போது செங்கலை தூக்கி காண்பித்தாரோ அன்றே செங்கல், ஜல்லி என கட்டுமான பொருட்களின் விலை எல்லாமே அதிகரித்துவிட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் 410 டு 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 450 முதல் 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதேபோன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கம்பியின் விலை தற்போது 70 முதல் 72 ரூபாயாகவும், 3600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு யூனிட் எம் சாண்ட் 4000 ரூபாயாகவும், 4600 ரூபாய்க்கு ஒரு யூனிட் வி சாண்ட் 5100 ரூபாயாகவும், 23,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லோடு செங்கலின் விலை 28,000 ரூபாயாகவும், 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 3 யூனிட் ஜல்லி 9500 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.