முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், அரசு அவர்களுடைய கடமை செய்கிறார்கள். நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இருக்குது என தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி காலத்தில் வளமான துறைகளை நீங்கள் நிர்வகித்து வந்தீர்கள், அதிகமான பணத்தை நீங்கள் தான் சம்பாதித்தீர்கள், ஆனால் உங்கள் வீட்டில் திமுக அரசு ரெய்டு நடத்தவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ்,
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு 2 முறை முதலமைச்சர் பதவியை தந்திருக்கிறார். முதல்முறையாக 2001, 2002இல் தந்தார். நான் அம்மா அவர்களோடு உடன் இருந்து பயணித்திருக்கிறேன். ஆளுங்கட்சியிலும் பயணித்திருக்கிறேன், எதிர்க்கட்சியிலும் பயணித்திருக்கிறேன். 13 ஆண்டுகளுக்கு பின்னால் மீண்டும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், எனக்கு முதலமைச்சர் என்ற பதவியை தந்தார்கள். மாண்புமிகு அம்மா அவர்களுடைய அந்த எண்ணத்தின் அடிப்படையில், நான் அவர்களுக்கு விசுவாசம் மிக்க தொண்டனாக தான் பணியாற்றினேன்.
தலைவர் என்று நிலைக்கு நான் என்னைக்குமே சென்றதில்லை. அம்மா அவர்கள் சில இடங்களில் என்னை சொல்லி இருந்தாலும் என்னை பொறுத்தவரையில் நான் அம்மா அவர்களுக்கு மட்டுமே விசுவாசத்துடன் இருந்திருக்கிறேன். புரட்சித்தலைவர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினார்களோ, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்தார்களோ அவற்றினுடைய அடிப்படை எந்த நேரத்திலும் சிதறிவிடாமல் காப்பாற்றுவதற்காக, பாதுகாப்பதற்கான மிகப்பெரிய பொறுப்பு எங்களைப் போன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொண்டர்களுக்கும் இருக்கு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.