Categories
மாநில செய்திகள்

“அவர் சொன்னது சரிதானே, அதில் என்ன தவறு” அந்தக் கருத்து மிக மிக நியாயமானது…. எம்.பி ராசாவுக்கு சீமான் திடீர் ஆதரவு….!!

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் எம்பி ஆ. ராசாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மனுதர்மத்தின் கொடுங்கான்மையை எடுத்துரைத்து சூத்திரர் எனும் விளைவை தமிழர்கள் சுமக்க கூடாது என கூறியதால் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ. ராசா அவர்களை மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமான போக்குகளை இனியும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரம கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அரசீற்றதோடு முன்வைத்த அண்ணன் ஆ. ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அக்கருத்துக்கு பக்க பலமாக துணை நிற்கிறது.

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்மை பெருமைகள் பல வாய்ந்த தமிழர் எனும் தேசிய இனத்தின் மக்கள் நாங்கள். தமிழர்களின் வாழ்வியல் இலக்கணமே அறநெறி தான். அது சமத்துவத்தையும் சம தர்மத்தையுமே அடிப்படையாகக் கொண்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என உயிர்ம சமத்துவம் போதிக்கிறார் தமிழ் மறையோன் வள்ளுவ பெருமகனார். சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காழ் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் என பாடுகிறார் சைவ சமயக் குறவர் திருநாவுக்கரசர். பறட்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ? என வினவுகிறார் சித்தர் சிவவாக்கியர்.

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர் என்று பாடுகிறார் ஐயா திருவருட்பிரகாச வள்ளலார். தாழக்கிடப் போரை தற்காப்பதை தர்மம் என்று அறம் போற்றுகிறார் ஐயா வைகுந்தர். நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யாரும் அடிமை இல்லை என்கிறார் அண்ணல் அம்பேத்கர். தன்னை உயர்ந்த சாதியென எண்ணிக்கொண்டு தனக்கு மேலே உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என எண்ணிவிட்டால் ஒரு சிக்கலும் இராது. என்கிறார் ஐயா பெரியார். ஆரிய மார்க்கமான இந்து மதத்தை தமிழர்கள் ஏற்றதாலயே தாங்கள் தனித்த பேரினம் என்பதை மறந்து போனார்கள்.

இந்து மதத்தில் தாங்களும் ஒரு பகுதி என்று கருதிக்கொண்டதாலேயே தன்மானத்தையும் தன்னாட்சி உரிமையும் தமிழர்கள் இழந்து விட்டார்கள் என்று கருதுகிறார் பேரறிஞர் அண்ணா. சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம். நீதி உயர்ந்த மதக் கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலாளர். என பொதுமை பாடுகிறான் பெரும் பாவலன் பாரதி. யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒன்னு தான். ஆக மொத்தம் நீயும் நானும் பத்து மாதம் தான் என‌ பேதங்களைச் சாடுகிறார் மக்கள் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

இப்படி பல்வேறு விதமான அறிஞர்களும் புலவர்களும் ஜாதி கொடுமைகள் மத வேற்றுமைகள் குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை கூறியிருக்கின்றனர். இதே போன்று தான் ஆ. ராசாவும் தமிழர்கள் மீதான சூத்திர பட்டத்தை போக்க வேண்டும் என சாடினாரே தவிர இறை நம்பிக்கை உடையவர்களை தவறாக பேசவில்லை. எனவே அண்ணன் ராசாவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்புபவர்களுக்கு நான் என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் ஆ. ராசாவின் கருத்துக்கு என்றென்றைக்கும் நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |