கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்க காலனியில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம் பாஜகவின் மக்கள் சேவை மையத்தின் சார்பில் நடத்தப் பட்டது. இந்த முகாமை பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கான காரணத்தை தடுக்காமல் தற்காலிக நடவடிக்கைகளை மட்டுமே தமிழக அரசு எடுத்து வருகிறது. கழிவு நீரை சுத்தப்படுத்தாமல் இருப்பது தான் நோய்க்கான முதல் காரணம்.
திமுக ஆட்சியில் அமர்ந்து பல மாதங்கள் ஆகியும் அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் ஸ்டாக் இல்லை. மருத்துவர்களிடம் கேட்டால் டெண்டர் வரவில்லை என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் முன்மாதிரியான அரசு என்று வாய் சவுடால் விடுகிறார்கள். தமிழக அரசு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குடிசை பகுதிகள் மற்றும் அரசு பள்ளிகளில் உடனடியாக சிறப்பு மருத்துவ முகாமை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். வாலாங்குளம் பகுதியில் டீசல் படகு சவாரியின் காரணமாக மீன்கள் செத்து மிதக்கிறது. ஆமை வேதத்தில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன்.
கோவையில் உள்ள தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் நேற்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது கழிப்பறை கட்டித் தருகிறேன் என்றும், சுத்தம் செய்து தருகிறேன் என்றும் கூறியுள்ளார். நான் வேண்டுமானால் எங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறதோ அந்த பிரச்சனைகளை எல்லாம் லிஸ்ட் போட்டு தருகிறேன். அவர் உதயநிதியிடம் ரொம்ப நெருக்கமாக பழகுவதால் அவரிடம் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணட்டும். அப்போதுதான் வாக்களித்த மக்களுக்கு அவர்கள் ஏதாவது உதவி செய்தது போன்று இருக்கும்.
கமல்ஹாசன் உதயநிதியிடம் படம் பற்றி பேசும்போது கோவை தெற்கு தொகுதியில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி பேசினால் நன்றாக இருக்கும். அவர்கள் ஷூட்டிங்குக்கு இடையில் டைம் பாஸ்க்காக வந்து மக்களிடம் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அமைச்சர்களை விட பவர்ஃபுல்லான இடத்தில் உதயநிதி தான் இருக்கிறார். நானே பலமுறை சட்டமன்றத்தில் பார்த்திருக்கிறேன். முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம் வைப்பதை விட உதயநிதி ஸ்டாலினுக்கு தான் பலர் வணக்கம் வைக்கிறார்கள். தென்காசியில் நடந்த தீண்டாமை கொடுமை கண்டிக்கத்தக்கது. சாதி மறுப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கிற தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் வேதனையானது என்றார்.