பிரண்டை சாப்பிட்டால் எலும்புக்கு வலுகிடைக்கும் என்று சித்த மருத்துவர்கள் மட்டுமல்ல ஆங்கில மருத்துவர்களும் ஆலோசனை கூறுகிறார்கள். இத்தகைய மருத்துவ குணங்கள் வாய்ந்த பிரண்டையை கொண்டு தயார் செய்யப்படும் ஈஸியாக ரெசிபிகள் குறித்து இங்கு காண்போம்.
பிரண்டை துவையல்
தேவையான பொருட்கள் :
வதக்க
பிரண்டை – ஒரு பிடி,
சின்ன வெங்காயம் – 5,
காய்ந்த மிளகாய் – 2,
தனியா – அரை டீஸ்பூன்,
பூண்டு – 3 அல்லது 4 பற்கள்,
புளி – எலுமிச்சை அளவு,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – சிறிதளவு.
தாளிக்க
கடுகு – கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய் – தாளிக்க.
செய்முறை
முதலில் பிரண்டையை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதன் பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், தனியா, பிரண்டை துண்டுகள் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அதனுடன் புளி சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பிரண்டைத் துண்டுகள் நன்கு வதங்க வேண்டும்.
இல்லையெனில் சாப்பிடும்போது நாக்கு அரிக்கும். வதங்கியதும் ஆறவைத்து சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும். சுவையான பிரண்டை துவையல் தயார்.
பிரண்டை சூப்
தேவையான பொருட்கள் :
பிரண்டை – ஒரு கட்டு,
தக்காளி – 2,
பச்சை மிளகாய் – 1,
சின்ன வெங்காயம் – 6,
இஞ்சி – சிறு துண்டு,
பூண்டு – 4 பல்,
பட்டை – சிறு துண்டு,
கிராம்பு – 2,
மல்லித்தழை – சிறிதளவு,
வெள்ளை மிளகுத் தூள்– அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
பிரண்டையைத் தோல் நீக்கிப் பொடியாக வெட்டி கொள்ளுங்கள். வெங்காயத்தையும், தக்காளியையும் நறுக்கி கொள்ளுங்கள். மிளகுத் தூள் தவிர மற்றவை அனைத்தையும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு அடுப்பில் வையுங்கள். மூன்று விசில் வந்ததும் இறக்கி வையுங்கள். சூடு ஆறியதும் குக்கரில் உள்ளதை மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றியெடுத்து, வடிகட்டி மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறுங்கள். விரும்பினால் சிறிது தேங்காய்ப் பால் சேர்த்துக்கொள்ளலாம்.
பிரண்டை குழம்பு
தேவையான பொருட்கள் :
பிரண்டை – 1 கப்
புளி – 100 கிராம்,
சின்னவெங்காயம் – 10,
தக்காளி – 1,பூண்டு – 7 பல்,
சாம்பார்பொடி – தேவைக்கேற்ப,
வெல்லம் – சிறிது,
கடுகு – 1/2 தேக்கரண்டி,
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி,
உளுந்துப்பருப்பு – 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிது,
பெருங்காயத்தூள் – சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப.
வறுத்துப்பொடி செய்ய :
நல்லெண்ணைய் – 1 மேஜைக்கரண்டி,
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி,
தனியா – 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிது,
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி,
கசகசா – 1/4 தேக்கரண்டி.
செய்முறை :
பிரண்டையின் நாரை நீக்கி பொடியாக நறுக்கவும். வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுந்துப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும். தீயைக் குறைத்து 10 நிமிடம் வரை வதக்கவும். புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும். பிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். சுவையான பிரண்டை குழம்பு தயார்.