Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதல் குறித்து தகவல் அளிக்க கோரி மனு… மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு!

புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரிய மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. 

ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப். 14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வீரர்கள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்து எங்கிருந்து கிடைத்தது என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. இந்த தாக்குதலில் சந்தேகிக்கப்படும் நபர்கள் யாரும் உயிருடன் இல்லாததால் இன்னும் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யாமல் என்.ஐ.ஏ. இருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக ஹரியானா மாநிலம் பானிபட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் பி.பி.கபூர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சி.ஆர்.பி.எப்., இயக்குனர் அலுவலகத்தில் கடந்த மாதம் மனு செய்தார். அந்த மனுவில் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் பெயர் மற்றும் பதவி, அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட உதவி தொகை, இந்த தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை மற்றும் தாக்குதலில் தொடர்புடையதாக நிரூபிக்கப்பட்ட அதிகாரிகளின் விபரம் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அவர் கேட்ட விபரங்களை தர சி.ஆர்.பி.எப்., டி.ஐ.ஜி.,யும் தகவல் அதிகாரியுமான ராகேஷ் சேத்தி மறுத்து விட்டார். சி.ஆர்.பி.எப்., அமைப்பில் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரங்களை மட்டுமே கேட்டுப் பெற முடியும். மற்ற விபரங்களை தர மறுப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் புல்வாமா தாக்குதலில் அதிகம் பயனடைந்தது யார்?, தாக்குதல் தொடர்பான விசாரணையில் கிடைத்தது என்ன? தாக்குதலுக்கு அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் இதுவரை யார் பொறுப்பேற்றது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |