காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்திலும் மத்திய பாஜக அரசின் அவலங்களாக காங்கிரஸ் கருதும் விஷயங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் அந்த கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு காஷ்மீர் மாநிலம் வரை 150 நாட்கள் திட்டமிடப்பட்டிருக்கின்ற இந்த யாத்திரையில் மொத்தம் 12 மாநிலங்களில் அவர் நடைபயணம் மேற்கொள்ள இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணம் தொடங்கிய ராகுல் தற்போது கேரள மாநிலத்தில் 18 நாட்கள் யாத்திரையை மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தமது இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக இன்று ஆலப்புழாவுக்கு சென்ற அவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள பொன்னமரா ஏரியில் பாரம்பரியமாக நடத்தப்படும் பாம்பு படகு போட்டியில் பங்கேற்று துடுப்புகளை வீசியுள்ளார்.
பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்துடன் போட்டியில் ராகுல் பங்கேற்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இணக்கத்துடன் செயல்பட்டால் நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்னும் வரிகளுடன் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் பதிவுத்துள்ளார். மேலும் 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்யவே காங்கிரஸின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகின்றார். கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கின்ற நிலையில் இந்திய ஒற்றுமையை யாத்திரையை மேற்கொண்டு இருக்கிறார் ராகுல்.