டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூ. 200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில் சுகேஷ் சந்திரசேகர் ஒரு குற்றவாளி என்று தெரிந்தும் அவருடன் பழகி, அவர் கொடுத்த பரிசு பொருட்களை வாங்கிய குற்றத்திற்காக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு நடிகை ஜாக்குலினை சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகம் செய்து வைத்த அவருடைய உதவியாளர் பிங்கி இராணியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பிங்கி இராணியிடம் விசாரணை நடத்திய போது இருவரது பதில்களிலும் முரண்பாடு இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக நடிகை ஜாக்குலினை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி போலீசார் சம்மன் நடத்தினர். இதனையடுத்து நடிகை ஜாக்குலினிடம் இன்று 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் ஜாக்குலினிடம் கடந்த 14-ஆம் தேதியும் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.