பருவநிலை மாற்றம் காரணமாக வருடம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. தற்போது மழை, வெயில் என்று பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்ச பாதிப்பு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண காய்ச்சல் என்பது மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால் தற்போது பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். சென்னை மட்டுமல்லாமல் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,166-ஆக அதிகரித்துள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது. சளி, தலைவலி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்கள் சிறப்பு காய்ச்சல் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமும் பரிசோதனைகள் நடைபெறுகிறது. கொரோனா முடிவுக்கு வந்து விட்டது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். அதே நேரத்தில் யாரும் பயப்படவும் வேண்டாம்” எனதெரிவித்தார்.