திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலியை ஏமாற்றிய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான பிரபு(33) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பிரபுவும், தர்மபுரியைச் சேர்ந்த 21 வயது பெண் இன்ஜினியரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கூறியுள்ளார். அதற்கு பிரபு மறுப்பு தெரிவித்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நியாயம் கேட்ட காதலியை பிரபு தனது உறவினர்களுடன் இணைந்து தகாத வார்த்தைகளால் திட்டியும், கைகளால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபுவை கைது செய்தனர்.