தொழிலாளியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மர்ம நபர்களை தனிப்படை போலீஸ்சார் தேடி வருகின்றார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிபேட்டையில் இருக்கும் சின்ன அடியா கவுண்டம்பட்டி அண்ணா காலனியை சேர்ந்த பரமசிவம் என்பவர் நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இதை தொடர்ந்து அவர் வேலை செய்யும் பொழுது காயம் ஏற்பட்டதால் சென்ற இரண்டு வருடங்களாக இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சென்ற 15ஆம் தேதி அவர் இரவு காவல் பணியில் இருந்தார். நேற்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருக்கும் டிராக்டர் சீட்டில் பிணமாக தொங்கியுள்ளார். மேலும் அவரின் இடுப்பு மட்டும் கால்கள் கைரால் கட்டப்பட்டு இருந்தது.
அவற்றின் சாவில் மர்மம் இருப்பதாகவும் கொலை செய்திருக்கலாம் எனவும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும் பேரூராட்சி அலுவலகம் முன்பாக காலை ஆறு முப்பது மணி அளவில் அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் ராசிபுரம்-ஆத்தூர் இடையேயான பிரதான சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. இதன் பின்னர் போலீசார் தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க போலீஸ் சூப்பிரெண்டு தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.