பெங்களூரில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் பவன் (23) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த வாலிபர் திடீரென இளம் பெண்ணிடம் சரிவர பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இளம்பெண் அந்தோணி என்ற வாலிபரை 2-வதாக காதலித்துள்ளார். இந்நிலையில் இளம் பெண்ணும், அந்தோணியும் இரு சக்கர வாகனத்தில் டிஎஸ்பி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்தனர். இதை தெரிந்து கொண்ட பவன் அவருடைய நண்பர்கள் சரத் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் அங்கு சென்றுள்ளார். அதன் பிறகு அந்தோணியின் இருசக்கர வாகனத்தை மறித்து 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த 3 பேரும் அந்தோணியை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது பவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து அந்தோணியை தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வாலிபர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே அந்தோணியை தாக்கும் போது இளம்பெண் பவன் மற்றும் அவருடைய நண்பர்கள் காலில் விழுந்து தன்னுடைய காதலரை விட்டு விடும்படி கதறி அழுதார்.
இதனையடுத்து இளம் பெண் பவன் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது பவன் மற்றும் அவருடைய நண்பர்கள் அந்தோணியை தாக்கியது தெரிய வந்தது. இதன் காரணமாக பவன், சரத் மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரின் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு இளம் பெண்ணுக்காக வாலிபர்கள் சண்டை போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.