மியான்மரில் உள்ள பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சிக்கி 11 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைபற்றியுள்ளது. இதனை தொடர்ந்து மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் 1,500-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். இப்போதும் அங்கு ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களை குறிவைத்து ராணுவம் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் மியான்மரில் பள்ளிக்கூடத்தின் மீது ராணுவம் வான்தாக்குதல் நடத்தியதாக சிறுவர்களுக்கான ஐ.நா.வின் அமைப்பு யுனிசெப் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “மியான்மரின் வடமேற்கு பகுதியில் சகாயிங் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர்களில் பறந்தபடி பள்ளிக்கூடத்தை சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 11 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு பின்னர் பள்ளிக்கூடத்திலிருந்து 15 சிறுவர்கள் மாயமாகியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மறுத்துள்ள மியான்மர் அந்த பள்ளிக்கூடத்தில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருந்தாகவும், அவர்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.