Categories
மாநில செய்திகள்

தம்பி தங்கப்பாண்டி திடீர் இறப்பு…. விரைவில் நீதி கிடைக்கணும்…. சீமான் வலியுறுத்தல்….!!!!

அருப்புக்கோட்டை அருகில் செம்பட்டியைச் சேர்ந்த தம்பி தங்கப்பாண்டி காவல்துறை விசாரணையின் போது இறந்த நிகழ்வு அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கணவர் தங்கபாண்டியை இழந்து இருகுழந்தைகளோடு தவித்து வரும் தங்கை கோகிலாதேவிக்கும், பெற்றோருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன் என கட்சியின் மூத்தத் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். காவல் துறை விசாரணையின் போது இறந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.

சென்ற 13ம் தேதி அருப்புக்கோட்டை நகரக் காவல் துறையால் சந்தேகத்தின்படி விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட கூலித் தொழிலாளியான தம்பி தங்கப்பாண்டி விசாரணைக்குப் பின் மர்மமான முறையில் இறந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என சீமான் குறிப்பிட்டுள்ளார். தங்கப் பாண்டியின் உடலில் 15-க்கும் அதிகமான இடங்களில் கடும் காயங்கள் இருந்ததை உடற்கூராய்வு உறுதிப்படுத்தியிருப்பது, காவல்துறையினரால் தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது. இந்த வழக்கு குற்றப் புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு மாற்றப்பட்டு 6 நாட்களாகியும், இதுவரையிலும் விசாரணையைத் தொடங்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தபின் கடந்த ஒன்றரை வருடக்காலத்தில், காவல் துறை விசாரணையின் போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. சமத்துவம், சமூக நீதி, திராவிடமாடல் என்றெல்லாம் கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையைக்கூடக் காத்திட முடியாத அரசாக திமுக விளங்குவது வெட்கக்கேடானது. காவல்நிலைய மரணங்களைத் தடுக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுபோல் தி.மு.க அரசு வெளியிட்ட அறிவிப்புகள் யாவும், வழக்கம்போல் வெற்று விளம்பர அரசியல் மட்டுமே என்பதைத் தம்பி தங்கப்பாண்டியின் மரணம் உறுதிப்படுத்துகிறது.

எனவே தம்பி தங்கபாண்டியின் மர்ம மரணம் பற்றி குற்றப்புலனாய்வுத் துறை விசாரணையை விரைவுபடுத்தி, எந்த வித அதிகார குறுக்கீடுமற்ற நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, அவரது இறப்புக்கு காரணமான அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தங்கபாண்டி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையும், 50 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

Categories

Tech |