கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் அஜி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூபாய் 11 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அஜிகுமார் தன்னுடைய வேலையை இழந்ததால் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 1.5 லட்சம் பணத்தை வங்கியில் அஜிகுமார் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கி நிர்வாகம் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதோடு நேற்று மதியம் வங்கி அதிகாரிகள் அஜிகுமாரின் வீட்டிற்கு சென்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அப்போது அஜிகுமாரின் மகள் அபிராமி (20) கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு வீட்டில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்த அபிராமி வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். அதன்பின் நீண்ட நேரம் ஆகியும் அபிராமி கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அபிராமி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அபிராமியின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அபிராமியின் மரணத்திற்கு காரணம் வங்கி நிர்வாகம்தான் என்று கூறி உறவினர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.