சென்னை அருகே போதையில் பைக்கை தொலைத்த விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் கதிர்வேடு பகுதியை அடுத்த பாரதிநகர் தெருவில் வசித்து வந்தவர் ஜான். இவர் அதே பகுதியில் தொழிலதிபர் ஒருவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது தந்தையை பார்க்க சென்று விட்டு பின் வீட்டிற்கு திரும்பும் வழியில் மதுபான கடை ஒன்றில் மது அருந்தியுள்ளார்.
பின் போதை தலைக்கேறிய நிலையில், தான் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே மறந்து விட்டு பேருந்தில் வீட்டிற்கு ஏறி வந்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்ததும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டோம் என்று ஞாபகம் வர மீண்டும் பேருந்தில் ஏறி மதுபான கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று பார்க்கையில் இருசக்கர வாகனம் காணவில்லை.
அதனை யாரோ திருடி விட்டார்கள் என்று நினைத்து போதையிலேயே புலம்பித் திரிந்த அவர் வீட்டிற்கு வந்த பின்பும் போதையில் அழுது புலம்பியுள்ளார். பின் இரு சக்கர வாகனம் தொலைந்த துக்கத்தில் மேலும் இரண்டு பாட்டில்கள் காலி செய்து விட்டு போதையில் புலம்பியுள்ளார். இந்நிலையில் மன விரக்தி அடைந்த அவர் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டதில் தற்கொலைக்கான காரணம் குறித்து அறிய உண்மையிலேயே இருசக்கர வாகனம் தொலைந்து போனதா? அல்லது போதையில் இவர் வேறு கடைக்கு சென்று பார்வையிட்டு விட்டு தவறுதலாக புரிந்து கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.