தூத்துக்குடி அருகே அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ரத்ததான கழக நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து ரத்ததான கழக உறுப்பினர்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு புத்துயிர் இரத்ததான கழக தலைவர் தலைமை தாங்க மற்றவர்கள் அவருடன் சேர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதில்,
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும், மருத்துவமனை வளாகத்திற்குள் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், அனைத்து நோய்களுக்கும் தரமான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ரத்ததான கழக நிர்வாகிகள் காளிதாஸ், ராஜேஷ் கண்ணன், சர மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்குப் பின் வருவாய் கோட்டாட்சியர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை விரைவில் எடுப்பதாக உறுதி அளித்ததன் பின் போராட்டம் கைவிடப்பட்டது.