ஹரியானாவில் குளிர்பதனக் கிடங்கில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
ஹரியானா மாநிலம் ஷாகாபாத் அருகில் இருக்கும் நல்வி கிராமத்தில் இயங்கி வரும் குளிர்பதன கிடங்கில், நேற்று இரவு திடீரென 9.30 மணியளவில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிடங்கை சுற்றி இருக்கும் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாத நிலை மற்றும் வாந்தி மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டது.
இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக வாயுக்கசிவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சுற்று வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பாதிக்கப்படாதவர்கள் உடனடியாக அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது நிலமை கட்டுக்குள் வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.