சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (29) நேற்று முன்தினம் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனா். அத்துடன் வீட்டிலிருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றில் “நான் ஒருவரை காதலித்தேன். என் காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை.
ஆகவே என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் தீபா தற்கொலை தொடர்பாக காதலன் சிராஜூதீனுக்கு சம்மன்அனுப்பப்பட்டது. இதற்கிடையில் விசாரணைக்கு அழைத்தும் வராததால் சிராஜூதீனுக்கு கோயம்பேடு காவல்துறையினர் வண்ணாரப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சம்மனை கொடுத்துள்ளனர்.
காரைக்குடியில் படப் பிடிப்பில் இருக்கும் சிராஜூதீன், நாளை சென்னை, கோயம்பேடு காவல் நிலையத்தில் ஆஜராவார் என அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நடிகை தீபாவின் வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி அலைப்புகள் வாயிலாக எடுக்கப்பட்ட விபரங்களை வைத்து காதலன் சிராஜூதீனிடம் கேட்பதற்காக 55 கேள்விகளை போலீஸார் தயார் செய்துள்ளனர். இதற்கிடையில் தீபாவின் ஐபோனை காணவில்லை என நடிகையின் சகோதரர் ராஜூ ஏற்கனவே தெரிவித்துள்ளார். இது பற்றி தீபாவின் சகோதரரிடம் நேரடியாக சென்று விசாரணை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.