Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ENGvIND : கேப்டன் ஹர்மன்பிரீத் 143* ரன்கள் விளாசல்…. 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி….. தொடரை கைப்பற்றிய இந்தியா..!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா தொடரை கைப்பற்றியது.. 

இந்திய மகளிர் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரை 1:2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதையடுத்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடர் தற்போது இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தநிலையில் இரு அணிகளும் இடையே 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேன்டர்பரி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் களமிறங்கினர். 2ஆவது ஓவரிலேயே ஷபாலி வர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த யாஸ்டிகா பாட்டியா மற்றும் மந்தனா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும்  பொறுப்பாக ஆடிவந்த நிலையில், யாஸ்டிகா 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். பின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் உள்ளே வர, மறுபுறம் சிறப்பாக தொடங்கிய ஸ்மிருதி மந்தனா அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.. அப்போது இந்திய மகளிர் அணி 19.1 ஓவரில் 99/3 என்று இருந்தது..

அதைதொடர்ந்து அணியின் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஹர்லீன் தியோல் இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்த ஜோடி சிறப்புடன் ஆடியது. ஹர்மன் பிரீத்  மற்றும் ஹர்லீன் இருவரும் அரை சதம் கடந்தனர். ஹர்லீன் 58 ரன்களில் அவுட் ஆகினார்.. இருப்பினும் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக சதம் விளாசினார். அதன் பின் வந்த பூஜா வஸ்த்ரகர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் தீப்தி சர்மா உள்ளே வர ஹர்மன் ப்ரீத் சதத்தை கடந்து விளாச  இறுதியில் இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 333 ரன்கள் எடுத்தது. ஹர்மன் பிரீத் கவுர் 111 பந்துகளில் (18 பவுண்டரி, 4 சிக்ஸர்) 143* ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் தீப்தி சர்மாவும் ஆட்டமிழக்காமல் 15 ரன்களில் களத்தில் இருந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் 5ஆவது ஒருநாள் சதம் இதுவாகும்.

இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டாம்சின் பியூமண்ட் 6 ரன்களிலும், எம்மா லாம்ப் 15 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து வந்த சோபியா டங்க்லி 1 ரன்னில் அவுட் ஆகி  வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 47 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. அதன்பின் ஆலிஸ் கேப்ஸி மற்றும் டேனி வியாட் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினர். பின் ஆலிஸ் 39 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

 

அதன் பின் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்திருந்த டேனி வியாட்டும் 65 (58) ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.  பின் சிறிது நேரம் தாக்குப்பிடித்த எமி ஜோன்ஸ் 39 ரன்களில் அவுட் ஆகினார். பின் வந்த ஃப்ரீயா கெம்ப் 12,  சோஃபி எக்லெஸ்டோன் 1, கேட் கிராஸ் 14 ரன்களிலும் அடுத்தடுத்து வந்த வேகத்தில் ஆட்டமிழக்க 37.6 ஓவரில் 211/9 என இங்கிலாந்து சரிந்தது.. அதைத்தொடர்ந்து பொறுமையாக ஆடி வந்த சார்லி டீன் 37 ரன்கள் எடுத்த நிலையில் கடைசியாக 45ஆவது ஓவரில் ரன் அவுட் ஆனார்..

முடிவில் இங்கிலாந்து அணி 44.2 ஓவரில் 10 விக்கெட் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. லாரன் பெல் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.. இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகலும், ஹேமலதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்திய அணி ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றது..

Categories

Tech |