செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாஞ்சான்குளம் பிரச்சனையில் தமிழக அரசு விரைந்து உடனடியாக கடைக்காரர் மீது நடவடிக்கை எடுத்தது ஆறுதல் அளிக்கிறது, அதை வரவேற்கிறோம். ஆனால் ஊர் கட்டுப்பாடு என்கின்ற பெயரால் சமூக புறக்கணிப்பை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள், இது சாதாரணமான ஒன்று அல்ல. ஒரு தனிநபர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது வேறு, ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்பது வேறு. அதாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு நபரை தாக்குவது, ஒரு நபருக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுவது என்பது வேறு.
ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தை ஒரு ஊரையே ஒதுக்கி வைப்பது கடைகளில் பொருள் கொடுப்பது இல்லை, வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை, உறவு வைத்துக் கொள்வதில்லை என்பது போன்று ஒடுக்கு முறையை திணிப்பது என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த மோசமான பழமையான சாதிய வன்மத்தின் உச்சம், இதை அரசு அலட்சியமாக பார்க்க கூடாது. ஊர் கட்டுப்பாடுகளுக்கு காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும், அவ்வளவு பேர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அதில் குறிப்பாக மகேஸ்வரன் மீது போடப்பட்ட வழக்கு எஸ்சி/எஸ்டி பிரிவில் போடப்படவில்லை என்று தெரிகிறது. ஒவ்வொரு பிரச்சனையிலும் வழிந்து போராடி அதன் பிறகு தான் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யும் உளவியல் நிலை காவல்துறை கொண்டு இருக்கிறது. எனவே தமிழக அரசு, காவல்துறையும் தமிழகம் தழுவிய அளவில் உரிய வழிகாட்டுதலை தரவேண்டும்.
தலித் மக்கள் எங்கே பாதிக்கப்பட்டாலும் புகார் அளித்தல் உடனடியாக அந்த புகார் ஏற்றுக்கொள்வதில்லை, ஏற்றுக்கொண்டாலும் எஃப் ஐ ஆர் போடுவதில்லை, எஃப் ஐ ஆர் போட்டாலும் எஸ்.சி எஸ்டி பிரிவில் போடுவதில்லை என்கின்ற போக்குகள் நீடிக்கிறது. ஆகவே பாஞ்சான்குளம் கிராமத்தில் நடந்த சம்பவத்தில் எஸ்சி ? எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், ஊர் கட்டுப்பாடு விதித்த அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.