சென்னையில் உள்ள குறளகம் கதரங்காடியில் வருடம் தோறும் தமிழக கதர் கிராமத்து தொழில் வாரியத்தின் சார்பில் கொலு பொம்மை விற்பனை கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இந்த பண்டிகை வருடம் தரும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் நிலையில், நடப்பாண்டிலும் கொலு பொம்மை விற்பனை கண்காட்சியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த விற்பனை கண்காட்சியை நேற்று கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிலையில் கண்காட்சியில் கொலு பொம்மைகள் மட்டுமின்றி, மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்படுகிறது.
அதோடு நடப்பாண்டில் விவசாயிகள் மற்றும் வேளாண் உற்பத்தி குழுவினரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மூங்கில் அரிசி, வரகு, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, திணை உள்ளிட்ட சிறு தானியங்கள் காதி கோல்ட் என்ற பெயரில் அரை கிலோ பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு காதி திரவ சலவை சோப்பு எனும் புதிய வகை சலவை சோப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்படும் மார்பிள்சிற்பங்கள், கற்பங்கள், காகித கூழ் பொம்மைகள், மர பொம்மைகள், மண் பொம்மைகள் மற்றும் தெய்வீக பொம்மைகள் போன்றவைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
இதேபோன்று அரசு மனநல காப்பகத்தில் இருக்கும் உள் நோயாளிகளால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், பூம்புகார் நிறுவனத்தின் கைவினைப் பொருட்கள் மற்றும் பனை ஓலை பொருட்கள் போன்றவைகளும் இடம்பெற்றுள்ளது. இந்த பொருட்களுக்காக மொத்தம் 27 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கலை நயம் மிக்க டெரகோட்டா பொம்மைகள், மதிப்பு கூட்டப்பட்ட மண்பாண்டங்கள், பீங்கான் பொருட்களுக்காக 8 அரங்குகள் என மொத்தம் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோத்தர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களால் செய்யப்படும் மண்பாண்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு சொர்ணா ஆகாச பைரவர், வீரராகவ உற்சவ பெருமாள், கிருஷ்ணர் வன போஜனம், சப்தரிஷிகள் மற்றும் காவிரி செட் போன்ற புதிய வகை பொம்மைகளும் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சியின் மூலம் ஏழை, எளிய கைவினை கலைஞர்கள் மற்றும் கிராம மக்கள் தங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்திக் கொள்ளலாம். மேலும் நடப்பாண்டின் விற்பனை இலக்கு 1.50 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கண்காட்சி மூலமாக 60 கைவினைக் கலைஞர்கள் நேரடியாகவும், 700-க்கும் மேற்பட்டவர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.