போலியான ஆவணத்தை தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் ஜீவானந்தம்(53)- நிர்மலா தேவி(53) தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த தம்பதியினர் பூந்தமல்லியைச் சேர்ந்த பத்மாவதி என்பவரிடம் பரணி புத்தூர் பகுதியில் இருக்கும் 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள 55 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளனர். அந்த இடத்தை காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பத்மாவதிக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மகாலிங்கத்தின் மகனான சேகரும், அவரது மனைவி நிர்மலாவும் போலியான ஆவணம் தயாரித்து போரூரில் வசிக்கும் கண்ணன் என்பவருக்கு அந்த இடத்தை பவர் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நிலத்தை வாங்கிய நிர்மலா தேவி பத்திரபதிவு அலுவலகத்தில் வில்லங்க சான்றை சரிபார்த்தபோது போலியான மூலம் நிலம் அபகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நிர்மலாதேவி ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போலியான பத்திரம் தயாரித்த குற்றத்திற்காக சேகர் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் கண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.