விடுமுறை எடுத்துக்கொண்டு வந்த கல்லூரி மாணவன் புல்லட்டில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் கிரிதரன். இவர் கோவையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ள கிரிதரன் நேற்று இரவு தனது புல்லட்டில் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவாயில் அருகில் சென்றபொழுது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று கிரிதரன் மீது மோதி விட்டு நிற்காமல் போய்விட்டது. இதில் புல்லட் சாலையில் சரிந்து கிரிதரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து மக்களும் வாகன ஓட்டிகளும் கிரிதரனை மீட்டு அருகில் இருந்த சேலம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி கிரிதரன் உயிரிழந்துள்ளார். தகவலறிந்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து கிரிதரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோவை சிசிடிவி காட்சிகள் மூலம் தேடிவருகின்றனர்.