அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதற்காக மோதிக் கொள்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலச் செயல் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு நடை பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தை தங்கள் கைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
இதனால் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதில் 47 பேர் படுகாயம் அடைந்தனர். அதோடு கார், பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்றவைகளும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப் பட்டது. அதன்பின் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜூலை 21-ஆம் தேதி கட்சி அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியின் கையில் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கட்சி அலுவலகத்திற்குள் சென்று பார்வையிட்டு அலுவலகத்தில் இருந்த காணாமல் போனால் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து கணக்கிட்டார். இதைத்தொடர்ந்து சிவி சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்படி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி வசம் மாற்றபட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் 64 பேர் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐடி காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.