கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் சீனாவின் வூகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு தனி விமானம் ஒன்று நாளை அங்கு செல்கிறது.
கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபேய் மாகாணம் வூகான் நகரில் முதலில் பரவத்தொடங்கி, தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பயம் காட்டி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரையில் 2,004 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 74,000த்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே, வைரஸ் தாக்குதல் அதிகம் இருக்கும் வூகான் நகருக்கு இந்தியாவில் இருந்து பலரும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தமாக சென்றிருந்தனர். இதையடுத்து அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. அதன்படி, ஏர்-இந்தியா (AIRINDIA) சிறப்பு விமானத்தை வூகான் நகருக்கு அனுப்பிய மத்திய அரசு 324 இந்தியர்களை டெல்லிக்கு அழைத்து கொண்டு வந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது விமானம் புறப்பட்டு சென்று மேலும் 300-க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்தது.
தாயகம் திரும்பிய அனைவருமே டெல்லியில் இருக்கும் சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது.
பின்னர் 14 நாட்களுக்கு பிறகு முகாமில் இருந்து அவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் இன்னும் வூகான் நகரில் 80-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். ஆகையால் அவர்களையும் மீட்டு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்நிலையில், இந்திய விமானப்படையின் மிகப்பெரிய ராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் சீனாவின் வூகான் நகருக்கு நாளை மருந்துபொருட்களை ஏற்றிக்கொண்டு செல்கிறது. அதனால் இந்த விமானத்தை பயன்படுத்தி வூகானில் சிக்கிதவிக்கும் எஞ்சிய இந்தியர்கள் நாடு திரும்பலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே நாளை மீதமுள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளனர்.