தமிழகத்தில் கொரோனா பரவலோடு டெங்கு மற்றும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த புதன்கிழமை மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 100 முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் பிறகு பூந்தமல்லி மற்றும் கொலப்பன்சேரி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பருவநிலை மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாறும் போது காய்ச்சல் வருவது வழக்கம்தான். அதேபோன்றுதான் தற்போதும் காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகத்தில் தற்போது H1N1 காய்ச்சலால் 353 பேர் பாதிக்கப்பட்டு, 9 பேர் அரசு மருத்துவ மனையிலும், 285 பேர் தனியார் மருத்துவமனையிலும், 59 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை உள்ளிட்ட 3 துறைகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த குழுக்கள் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணிகள் ஈடுபட்டுள்ளனர். வியாழக்கிழமை முதல் காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருக்கிறது. அதோடு மாநிலம் முழுவதும் 388 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாக ஊரகப்பகுதிகள் தோறும் சென்று மருத்துவ சிகிச்சை வழங்குவார்கள் என்றார்.