மாணவர்கள் தாக்குதலை கண்டித்து பேருந்து ஓட்டுநர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஹைகோர்ட்டில் இருந்து எண்ணூர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் டேவிட் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்து காமராஜர் நகர் அருகே சென்றபோது பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால் டேவிட் அவர்களை கண்டித்துள்ளார். மேலும் பேருந்தின் உள்ளே வருமாறு டேவிட் அழைத்தும் மாணவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனை பார்த்த ஓட்டுநர் சாலை ஓரமாக பெருந்தை நிறுத்தினார். இதனால் கோபமடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனை அடுத்து அந்த பேருந்து எண்ணூர் டிப்போவுக்கு வந்தபோது அங்கு வந்த 2 பள்ளி மாணவர்கள் டேவிட்டை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனை பார்த்த மற்ற பேருந்து ஓட்டுநர்களும், கண்டக்டர்களும் இணைந்து மாணவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது அங்கு சென்ற மாணவர்களின் பெற்றோர் தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் மாணவர்களை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இதனை கண்டித்து டிரைவர்களும், கண்டக்டர்களும் எண்ணூர் பேருந்து டிப்போவில் இருந்து காட்டுக்குப்பம், தாழங்குப்பம் வழியாக பேருந்தை இயக்க மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் கத்திவாக்கம் மேம்பாலம் வழியாக பேருந்தை இயக்கியதால் தாழங்குப்பம், காட்டுக்குப்பம், நெட்டுகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதனை அடுத்து மீனவ கிராம சங்க நிர்வாகிகள் பேருந்து ஓட்டுநர் மற்றும் கண்டக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்தனர். பின்னர் காலை எட்டு மணி முதல் வழக்கமான வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.