இன்றைய குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் என்பது அத்தியவசியமான விஷயமாக மாறிவிட்டது. அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த முந்தைய காலகட்டத்தில் விளையாட்டு பொருட்களை காட்டியும், வேடிக்கை காட்டியும் சமாதானப்படுத்துவார்கள்.
ஆனால் தற்போது, அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்களையோ போட்டு அவர்கள் கையிலேயே கொடுத்து விடும் நடைமுறை தற்போது அதிகரித்துள்ளது.
குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்பட்டு சிவக்கின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. இவற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.
- ஒரே நாளில் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் பழக்கத்தை மாற்ற முடியாது. முதலில் குழந்தைகள் முன் பெரியவர்களாகிய நாம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு பயன்படுத்த கொடுக்கும் நேரத்தை குறைக்கவும் தொடர்ந்து பயன்படுத்தாமல் இடைவெளி விட்டு பயன்படுத்த செய்யுங்கள்.
- உங்களது மொபைலை குழந்தைகளிடம் கொடுக்கும் போது அதனை ஏரோ பிளைன் மோடில் போட்டு அவர்களிடம் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு கதிரியக்க பாதிப்பு உண்டாகாமல் தவிர்க்கலாம்.
- வீட்டுக்கு வெளியே போய் விளையாடும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். அவர்களோடு சேர்ந்து நீங்களும் விளையாடினால் அவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
- குழந்தைகள் போனை பயன்படுத்தும்போதும் நேராக அமர்ந்து இருக்கிறார்களா,என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை குனிந்து போனை பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. இதனால் கழுத்து நரம்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- குழந்தைகளின் கல்வி சம்பந்தமான ஏராளமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதிக நேரத்தை போனிலேயே செலவழிக்க அனுமதிக்கக்கூடாது.
- பெற்றோர்கள் தங்கள் கையில் செல்போனை வைத்து கொண்டு குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம். அவர்களிடம் செல்போனை ஒப்படைக்க வேண்டாமே!