11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி வகுப்பறையில் மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.
இதனால் பாட்டியின் பராமரிப்பு மாணவி வளர்ந்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலைக்கு செல்லும் பாட்டி 650 ரூபாயை சேர்த்து வைத்துள்ளார். அந்த பணத்தில் மாணவி செருப்பு வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பாட்டி கூலி வேலைக்கு சென்று சேர்த்து வைத்திருந்த பணத்தில் செருப்பு வாங்கினாயா? என பேத்தியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி சர்க்கரை நோய்க்கான 15 மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றதால் மயங்கி விழுந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.