மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் வஉசி தெருவில் வசிப்பவர் காளிமுத்து. இவருடைய மகள் கனிஷ்கா (9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று காளிமுத்து மற்றும் அவருடைய மகள் திடீரென்று மாயமாகியுள்ள நிலையில் இருவரையும் காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி தேடியுள்ளார். இதுகுறித்து தகவல் தெரியாத அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் வீட்டின் பரணில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த பிரியதர்ஷினி பரணில் ஏறி பார்த்தபோது அங்கு ஒரு சாக்கு முட்டை இருந்துள்ளது.
அதை பிரித்து பார்த்தபோது உள்ளே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி கனிஷ்காவின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். மேலும் இது குறித்து முதற்கட்ட விசாரணையில் காளிமுத்து அடிக்கடி சந்தேகம் அடைந்து பிரியதர்ஷினியிடம் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சிறுமி மாயமான தினத்தன்று அவரும் தலைமறைவானதால் சிறுமியை அவரே கொலை செய்துவிட்டு தப்பி சென்றாரா? என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் காளிமுத்துவை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியிள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.