மியான்மரில் சிக்கியுள்ள 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால், மின்சாரத்தில் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்துகின்றார்கள் என கதறியுள்ளனர்.
தாய்லாந்தில் ஐடி துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை தருவதாக கூறி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொச்சி, ஐதராபாத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டனர். 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள், பாங்காக் விமான நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்து மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள், சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடும்படி கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், மீறினால், லேசர் துப்பாக்கி மூலம் மின்சார ஷாக் கொடுத்து, கடுமையாக தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான கண்காணிப்புகளையும் மீறி, இவர்கள் ஊடகங்களை தொடர்பு கொண்டனர். இதன் மூலம் தான், இந்திய ஐடி இளைஞர்கள் படும் துன்பங்கள் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. இவர்களில் 9 பேர் மட்டும் ஐதராபாத்தை சேர்ந்த அம்ஜத் உல்லா கான் என்ற சமூக ஆர்வலரின் உதவியுடன் கிரிப்டோகரன்சி மூலம் ரூ4 லட்சத்தை கொடுத்து விட்டு இந்தியா தப்பி வந்துள்ளனர். தங்களை சுட்டு கொன்று விடுவார்கள் என்ற பயத்தில், இந்திய ஐடி ஊழியர்கள் அடிமைகளாக வேலை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்திய ஐடி இளைஞர்கள் மியான்மரில் “ஷ்வீ கோக்கோ” என்று அழைக்கப்படும் கேளிக்கை விடுதிகள் நிறைந்த சுற்றுலா தலத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சீன தொழிலதிபர் ஷி ஜிஜாங் இதன் உரிமையாளர் ஆவார். இன்டர்போல் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இவர், கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அம்ஜத் உல்லா வெளியிட்ட டுவிட்டரை பார்த்த ஒன்றிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உதவி மையம், பாதிக்கப்பட்டுள்ள ஐடி இளைஞர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண் மற்றும் இ-மெயில் முகவரியை வெளியிட்டுள்ளது.