சென்னையில் இந்திய ரிசர்வ்வங்கி, ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஒரு விழாவில் இன்ஸ்டன்ட் கிஸான் கிரெடிட்கார்டுக்கான (KCC) முன்னோடித் திட்டத்தை பெடரல் வங்கி அதிகாரப்பூர்வமாக துவங்கியிருக்கிறது. இப்போது இருந்து வரும் பாரம்பரியமான வழிமுறையோடு ஒப்பிடும்போது விவசாயிகளுக்கு இது ஒரு புது அணுகு முறையாக இருக்கும். தொடக்கத்தில் இருந்து முடிவுவரை விரிவான டிஜிட்டல் மற்றும் தாள் பயன்பாடு இல்லாத பயணத்தை ஏதுவாக்குவதற்கு சிறப்பு திறன்களை கொண்டதாக இந்த செயல்தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த செயல் திட்டத்தில் இணைகிற செயல் நடவடிக்கை E-kyc வழியே நிகழும். TNeGA என்ற இணைய வாசலில் இருந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நில பதிவுருக்கள், ஆவணங்கள் பெறப்படுகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியளவு தானியக்க முறையில் கணக்கிடப்படுகிறது. இதற்குரிய ஆவண செயலாக்கம், e-sign வழியே நிகழ்கிறது. இவ்வளவு சிறப்பு வசதிகள் உடைய இந்த செயல்திட்டமானது, சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு குறைந்த மதிப்பிலான, சிறிய தொகையிலான கடன்களை வழங்குவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. அத்துடன் இதுவரையிலும் சேவை வழங்கப்படாத மற்றும் குறைவாக சேவை வழங்கப்படுகிற கிராமப்புற பொதுமக்களுக்கு திறன்மிக்க கடன் வசதியினை ஏற்பாடு செய்வதற்காக இந்த செயல் தளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி பெடரல் வங்கியின் மேலாண் இயக்குனர் ஷியாம் சீனிவாசன் பேசியதாவது “நிலம், பிற சொத்து உரிமைத்துவ பதிவுருக்கள் மற்றும் ஆவணங்கள் அதிக எண்ணிக்கையில் பரவலாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும் போது, நம் சமூகத்தில் அதிக தகுதியுள்ள பிரிவினரின் இல்ல கதவுகளுக்கு கடன்வசதி சென்றடைவதற்கு டிஜிட்டல் உதவும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம் என தெரிவித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் (RBIH)-ன் தலைமை செயலாக்க அதிகாரி ராஜேஷ் பன்சால் பேசியதாவது, இத்திட்டம் நம் விவசாயிகளுக்கு சிரமம் இல்லாமல் எளிதாக கடன்வசதி கிடைக்கப் பெறுவதற்கான சாத்தியங்களை திறந்து வைக்கிறது எனவும் நாடு முழுதும் இத்திட்டம் அமலாக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.