ஜி7 நாடுகள் நிர்ணயித்த விலை ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லாவிட்டால், சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்த போவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா செலவிடும் தொகையை கட்டுப்படுத்தவும், அதன் வருவாயை குறைக்கவும் ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் சமீபத்தில் கச்சா எண்ணெய் உச்சவரம்பு விலையை நிர்ணயித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் சேர்ந்து கொள்ளும்படி இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், இது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக இந்தியா பதிலளித்தது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியதாவது, “ஜி7 நாடுகள் நிர்ணயித்த உச்சவரம்பு விலை ரஷ்யாவால் ஏற்று கொள்ள கூடியதாக இல்லாத பட்சத்தில், சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோகம் அடியோடு நிறுத்தப்படும். அத்துடன் அமெரிக்காவின் உச்சவரம்பு விலைக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கான விநியோகமும் நிறுத்தப்படும். ரஷ்யா அதன் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடைமுறையையும் பின்பற்றாது. இந்தியா இதுவரை கவனமாக முடிவு எடுத்து வருகின்றது. ரஷ்யாவின் நடவடிக்கையால் பாதிப்பு ஏற்பட்டால், தன்னை பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்து கொள்ளும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.