ரோஹித் சர்மாவும், அக்சர் பட்டேலும் சிறப்பாக ஆடியதால் தோல்வியடைந்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் 22ஆம் தேதி பெய்தமழையினால் VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி நேற்று முன்தினம் 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் டாஸ் வென்ற ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்பின் ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் 90/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அதிரடியாக மேத்யூ வேட் 43 (20) ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 31 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 2 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்..
பின்னர் ஆடிய இந்தியா 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் இழந்து 92 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. ரோஹித் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் டேனியல் சாம்ஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் 1 -1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது..
பின்னர் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச்பேசியதாவது, 5 ஓவர் வரை தான் போட்டி நடக்கும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட கூடுதலாக 3 ஓவர் அதிகமாக கொடுக்கப்பட்டது. இப்போட்டிக்கான திட்டங்கள் எங்களிடம் சரியாக இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ரோஹித் சர்மா மிகச்சிறப்பாக ஆடினார். அதேபோல இந்திய அணியின் பவுலர் அக்சர் பட்டேல் வீசிய 2 ஓவர்களால் போட்டியில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டது. அவருடைய பவுலிங் தான் எங்களது தோல்விக்கு காரணம். எங்களது அணி சார்பில் பேட்டிங்கில் மேத்யூ வேட் மிகவும் சிறப்பாகவும், பவுலிங்கில் ஆடம் ஜாம்பா மிக சிறப்பாக செயல்பட்டதாக கூறினார்.