Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு….. “மக்கள் நீதி மய்யம் பாஜக ரசிகர்கள் அல்லர்”…. ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள்….. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ம.நீ.ம வலியுறுத்தல்..!!

வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்..

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு தீவைப்பு சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. ஒரே நாளில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இது போன்ற வன்முறையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். இத்தகு சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் கலவரங்களை தூண்டி விடக் கூடிய அபாயம் மிக்கவை.

மக்கள் நீதி மய்யம் பாஜக ரசிகர்கள் அல்லர். ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள். அரசியல் மக்களுக்கானது. வன்முறையால் அதை வெல்ல முற்படுவது மிருக குணம். மிருககுணம் கொண்டோர் எவராயினும் அவர்கள் நாட்டில் திரியவேண்டியவர்கள் அல்ல. நாங்கள் வன்முறையை கைக்கொள்ளும் எத்தரப்பிற்கும் எதிரானவர்கள். எதிர்வரும் காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாடலாம் என நினைப்பவர்களை மக்கள் நீதி மைய்யமும் நானும் வன்மையாக எதிர்க்கிறோம்.

எந்த சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம். அமைதி பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை வெடிகுண்டு கலவர கலாச்சாரத்திற்கு மாற்ற முயல்வோரை இரும்பு கரம் கொண்டு அடக்கி சட்டம் ஒழுங்கையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |