நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில காவல்துறை இணைந்து சோதனை நடத்தியதில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 105 பேர் கைது செய்யப் பட்டனர். தமிழகத்திலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்து அமைப்பினரை குறி வைத்து அவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் கோவை மாவட்டத்தில் மட்டும் இன்றி, திண்டுக்கல், செங்கல்பட்டு, கடலூர், திருப்பூர், ஈரோடு மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதன்படி கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையராக, சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் பொறுப்புக்கு சிங்காநல்லூர் சரக உதவி ஆணையாளர் அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.