ரஜினிகாந்த், விஜய் உட்பட பல நடிகர்களுடன் சேர்ந்து 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் போண்டா மணி (59). இவர் தற்போது சிறுநீரக நோயால் சிரமப்பட்டு வருகிறார். 2 சிறுநீரகங்களும் செயல் இழந்ததால் சென்னை அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவுக்கு உதவிக் கரம் நீட்ட திரையுலகினர் முன் வர வேண்டும் என சக நடிகரான பெஞ்சமின், வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போண்டா மணியை நேரில் சென்று சந்தித்ததோடு, அவரது மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என உறுதியளித்தார். இதற்கிடையில் போண்டா மணிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூபாய்.1 லட்சம் நிதியுதவி வழங்கி இருந்தார்.
அதன்பின் நடிகர் வடிவேலு தன்னுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கும் போண்டா மணியை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக வடிவேலு உறுதியளித்திருந்தார். இந்நிலையில் தற்போது போண்டா மணியின் மருத்துவ செலவுக்காக நடிகர் தனுஷ், ரூபாய்.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.