சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இதன் பாதிப்பால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 2000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்கா , இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடான ஈரானில் கொரோனா வைரஸால் 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஈரானின் கோம் நகர சுகாதாரத் துறை அலுவலர் மொகமதிரேஸா காதிர் கூறும் போது , உயிரிழந்த இரண்டு பேரும் கோம் நகரவாசிகளாவர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் இரண்டு நாட்களுக்கு பின்பு தான் எங்களை சந்தித்தனர். இவர்கள் இருவரும் இதுவரை எந்த வெளிநாட்டிற்கும் சென்றதில்லை. கோம் நகரில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி விட்டோம். பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்தார்.
வெளிநாட்டுக்கே செல்லாத இவர்கள் இருவர்க்கும் எப்படி கொரோனா பாதிப்பு இருந்தது. அப்படி மற்றவரிடம் இருந்து நோய் தொற்று ஏற்பட்டால் அந்த மற்றவர் யார் ? ஈரானில் இந்த 2 பேருக்கும் மட்டும் தானே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவியது எப்படி ? அப்படியானால் ஈரானிலும் கொரோனா வைரஸ் பரவுகின்றதா ? என்ற பல்வேறு ஆய்வுகளை அந்நாட்டு சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது.