பிரசவத்திற்கு பிறகு இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துபாளையம் கிராமத்தில் பனியன் கம்பெனியில் ஊழியராக வேலை பார்க்கும் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வான்மதி என்ற மனைவி இருந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான வான்மதி நேற்று முன்தினம் பிரசவத்திற்காக அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீரென மின்தடை ஏற்பட்டு ஜெனரேட்டர் பழுதானதால் அறுவை சிகிச்சை மூலம் வான்மதிக்கு பிரசவம் பார்க்க முடியாது நிலை ஏற்பட்டது.
இதனால் விக்னேஸ்வரன் தனது மனைவியை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார். இதில் வான்மதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் மேல் சிகிச்சைக்காக கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் திடீரென வான்மதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் அன்னூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உரிய நேரத்தில் பிரசவம் பார்க்காமல் இளம் பெண்ணின் இறப்புக்கு காரணமானதை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலந்து போக செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.