காதல் மனைவியிடம் வரதட்சனை கேட்ட வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாங்குப்பம் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரவேல் என்ற மகன் உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக குமரவேல் அருணாதேவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் அருணா தேவியின் பெற்றோர் வீட்டிலேயே வாழ்ந்து வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு சென்ற குமரவேல் மீண்டும் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து அருணா தேவி கேட்டபோது 1 லட்ச ரூபாய் பணம், 50 பவுன் தங்க நகையை கொடுத்தால் தான் உன்னுடன் குடும்பம் நடத்துவேன் என குமரவேல் கூறியுள்ளார். இதுகுறித்து அருணா தேவியின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே அருணாதேவி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குமரவேலை தீவிரமாக தேடி வருகின்றனர்.